Friday, 20 April 2012

சிலப்பதிகாரம்

கடிமலர் களைந்து முடிநா றழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆக்கமும் தோய்ந்து
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்
வெங்கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழ
ஏரோடு நின்றோர்  ஏர்மங் கலமும்
அறிந்து கால் குவித்தோர் அரிகடா உறுத்த
... பெருஞ் செய்ந்நெல்லின் முகவைப் பாட்டும்
தென்கினைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழிசை ஓதையும்
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டாங்கு .



 .......... சிலப்பதிகாரம்  ....     புகார்க் காண்டம்


நாற்று நடும் கழனியில் குவளை முதலிய மலர்களைக் களைஎடுத்து
விட்டு முடி நாற்றை பகிர்ந்து நட்டு,தொடிவளைத் தோளிலும், மார்பிலும்
சேறுபடிந்த கோலத்துடன் அழகுறத் தோன்றி ,சிவந்த கயல் மீன் ஒத்த நீண்ட கண்களையும்
கொச்சைச் சொற்களையும் உடைய கடைசியர் மிகுந்த மயக்கம் தரும் கள்ளை உண்டு
தொலைத்ததால் பாடும் புதிய பாட்டொலியும் எங்கும் கேட்கும்.
ஒளி விளங்கும் நெற்கதிரோடு அருகம் புல்லையும் குவளை மலரையும்
விரவித் தொடுத்த மாலையை மேழியிலே சூட்டி ,நிலத்தைப் பிளப்பவரைப் போல
கடவுளைப் போற்றுவோர் கைகூப்பித் தொழுது நிற்க ,பொன்னேர்ப் பூட்டி நிற்போர் பாடும்
ஏர் மங்கலப் பாட்டின் ஒலியும் கேட்கும்.
நெல்லைப் பிரித்து ஓரிடத்தில் குவித்தோர் ,தாள் போரைப் பிணைபூட்டி
மிதித்தப் பின்னர் ,அந்நெல்லை முகந்து முறைத்தால் தூற்றும்போது
பாடும் முகவைப் பாட்டொலியும் எங்கும் கேட்கும். தெளிந்த ஓசை மிக்க
தடாரினையுடைய கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த மார்ச்சனையுடைய
திரண்ட முழவினது மகிழ்ச்சி தரும் இனிய ஒலியும் எங்கும் கேட்கும்.

கிராமியப்பாடல்கள் இவ்வாறு மலர்கின்றன.....!

No comments:

Post a Comment